முன்னாள் கிரிக்கெட் வீரர் பள்ளியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்!
வீரேந்திர சேவாக்கின் பள்ளியில் 8 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் என்பவர் ஆரம்பித்த பள்ளியாக தற்போது சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி இருந்து வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த பள்ளி வீரேந்திர சேவாக்கால் நிறுவப்பட்டது. மேலும் அவரது மனைவி ஆர்த்தி சேவாக் பள்ளியின் தற்போதைய தலைவராக உள்ளார். இது தொடர்பாக சிறார் நீதிச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்த விசாரணையை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி கூறுகையில், "குழந்தைக்கு இது பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. ஆனால் மருத்துவமனை சான்றிதழ்கள் மூலமாக இந்த ஒரு சம்பவம் உறுதியாகி உள்ளது. இந்தப் பள்ளியின் விடுதியில் தற்போது பல்வேறு மாணவர்கள் தங்கிப் படித்து வருகிறார்கள். அதனால் தற்போது விடுதியில் உள்ள சக மாணவர்கள் மீதும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் பகிரப்படும்" என்று DSP ராகுல் தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குழந்தையின் தந்தை புகார் அளித்ததையடுத்து, சனிக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தையின் தந்தை உள்ளூர் SPயை சந்தித்து தனது குழந்தை விடுதியிலேயே துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள CCTV காட்சிகளை வைத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். JJ சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக மகிளா காவல் நிலையத்தில் தற்போது இந்த வழக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது.
Input & Image courtesy: OpIndia News