9440 MT மருத்துவ ஆக்ஸிஜனை கொண்டு சேர்த்த இந்திய ரயில்வே-மத்திய அரசு தகவல்!
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையின் மூலம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆக்சிஜனை விநியோகித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் இரவும் பகலுமாக தீவிரமாக கண்காணித்து ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த சேவையில் இந்திய ரயில்வே துறையும் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் இதுவரை நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே சுமார் 590 டேங்கர்கள் மூலம் 9440 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது. இதுவரை 150 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்து பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை கொண்டு வந்துள்ளன. தற்போது 55 டேங்கர்களில் 970 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன், 12 ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.
தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்துக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்றும், இன்றும் பல ஆக்ஸிஜன் டேங்கர்களை இறக்கியுள்ளன. தேசிய தலைநகர் மண்டலத்துக்கு விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு 5000 மெட்ரிக் டன்களை கடந்து விட்டது. கடந்த சில நாட்களாக, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்து வருகின்றன.
கேரளா தனது முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 118 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை பெற்றது. தற்போது வரை, மகாராஷ்டிரா 521, உத்தரப் பிரதேசம் 2525, மத்தியப் பிரதேசம் 430, ஹரியானா 1228, தெலங்கானா 389, ராஜஸ்தான் 40, கர்நாடகா 361, உத்தரகாண்ட் 200, கேரளா 118, தமிழ்நாடு 151, ஆந்திரப் பிரதேசம் 116, தில்லி 3320 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை பெற்றுள்ளன. இன்னும் பல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு புறப்படுகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையின் மூலம் நாட்டில் ஏற்பட்டிருந்த ஆக்சிஜன் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இரவும் பகலுமாக பணியாற்றி வருகின்றனர்.