நான்காண்டு ராணுவ பணி முடிந்ததும் கைமேல் வேலை - அக்னிபத் வீரர்களுக்கு குவியும் வேலைவாய்ப்புகள்

Update: 2022-06-21 12:20 GMT

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்து, நான்கு ஆண்டு பணி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக, மகிந்த்ரா, ஆர்.பி.ஜி உள்ளிட்ட  தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நான்கு ஆண்டுக்குப் பின், அக்னிபத் வீரர்கள் துணை ராணுவம் உட்பட பல துறைகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான்கு ஆண்டு பணி முடிந்ததும், தங்களுக்கு வேறு வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காத சூழல் ஏற்படும் என்றும், அதனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, வட மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல தனியார் நிறுவனங்கள், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன. மகிந்த்ரா குரூப் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, ராணுவப் பணியை முடித்த திறமையான, பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை, மகிந்த்ரா குழுமம் வரவேற்கிறது என்றார்.

பயோகான் லிட்., நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் அக்னி வீரர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது  என்றார். ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஸ் கோயங்கா, எங்கள் நிறுவனமும் அக்னி வீரர்களை வரவேற்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்றார்.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சங்கீதா ரெட்டி, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுதர்சன் வேணு ஆகியோரும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

Input from: dinamalar 

Similar News