தொடர் குண்டுவெடிப்பு: 38 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்தியாவின் மிக முக்கிய மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்று ஆகும். அங்கு கடந்த 2008ம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த கொடுரதாக்குதலில் சுமார் 56 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 240 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதில் 77 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டதில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என குஜராத் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: Asianet