பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியீடு! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி போடக்கூடாது?

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியீடு! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி போடக்கூடாது?

Update: 2021-01-19 16:50 GMT
கோவாக்சின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக், பக்கவிளைவுகளைத் தவிர்ப்பதற்காக யார் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, ஒவ்வாமை, காய்ச்சல், இரத்தப்போக்கு, கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், உடல்நலம் தொடர்பான கடுமையான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்படக்கூடாது.

கோவாக்சின் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் பயனாளிகள் முதலில் தங்கள் மருத்துவர் அல்லது தடுப்பூசி வழங்குநரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நிறுவனம் கூறியது. கடுமையான ஒவ்வாமை எதிர்வினை பெறுபர்களை இது எச்சரித்துள்ளது.

இதில் மூச்சு விடுவதில் சிரமம், முகம் மற்றும் தொண்டை வீக்கம், வேகமான இதயத் துடிப்பு, உடல் முழுவதும் தடிப்புகள், தலைச்சுற்றல் மற்றும் பலவீனம் ஆகிய பிரச்சினை உள்ளவர்கள் இதில் அடங்குவார்கள். "உங்களுக்கு ஒவ்வாமை வரலாறு இருந்தால் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் பெறக்கூடாது. அதிக காய்ச்சல், இரத்தப்போக்கு கோளாறு அல்லது இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் ஒரு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், மற்றொரு கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் தடுப்பூசி போடும் அலுவலரிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்" என கூறியுள்ளது.

எனினும் இது போன்ற சிக்கல் உள்ளவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாமல் இருத்தல் நல்லது என பரிந்துரைத்துள்ளது. தடுப்பூசியை பெறுபவர்கள், அவர்களின் மருத்துவ நிலைமைகள், அவர்கள் எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் ஒவ்வாமைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மருந்துகளில் கோவாக்சினும் ஒன்றாகும். இது பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முற்றிலும் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி ஆகும். 

மற்றொன்று கோவிஷீல்ட், இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட்(ISS) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது. எண்களின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் ISS ஆகும். 

Similar News