பாரதியின் புரட்சிப் பாடல்களே எனது அரசின்  சீர்திருத்த சட்டங்கள்: சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

பாரதியின் புரட்சிப் பாடல்களே எனது அரசின்  சீர்திருத்த சட்டங்கள்: சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

Update: 2020-12-11 18:34 GMT

திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரம் என்கிற ஊரில் சுப்பிரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 - ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.

 பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

 தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

இவரின் சமகாலத்தை சேர்ந்த மா மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

"வீழ்வேன் என நினைத்தாயோ" என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று 139 வது பிறந்த நாள். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மகாகவியின் சாதனைகளையும், தீர்க்கதரிசனத்தையும் சொல்லி மாளாது. 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் பாரதியின் இன்றைய 139- வது பிறந்த நாளில் நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில் பங்கேற்று நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும் அவரது பெருமைகளை நினைவு கூர்ந்தார்.

அப்போது அவர் பேசுகையில் கவிஞர், பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர் என பன்முகங்கள் கொண்டவர் பாரதியார், அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்டவர், அச்சம் இல்லை..அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாடல்வைகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி அவர்கள், வானமே இடிந்து விழுந்தாலும் சரி அச்சம் இல்லை ..அச்சம் இல்லை என்ற இந்த பாடலை இளைஞர்கள் உதவேகமாக கொள்ள வேண்டும்.  

அச்சமில்லை என்றால்தான் இளைஞர்கள் வெற்றி பெறமுடியும். தமிழையும் , இந்தியாவையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார். வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகள்தான் என்றாலும் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளார் பாரதியார். பெண்களுக்கான சுதந்திரமும், அதிகாரமும் பாரதியின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாக இருந்தது,  நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் பெண்கள் விளங்கவேண்டும் என்றும் அவர் எழுதியுள்ளார்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு பாரதி முக்கியத்துவம் அளித்ததற்கு ஏற்ப, மத்திய அரசும் 15 கோடி பெண்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் கடன் வழங்கி பொருளாதார வலிமைமிக்கவர்களாக மாற்றி இருக்கிறது என்றார்.   

இனியொரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாடல் வரிகளை தமிழில் சொன்ன பிரதமர் பாரதியார் கூறிய கருத்துக்கு ஏற்ப ஏழை எளிய மக்களுக்கான உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக கூறினார். அவரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்ற பிரதமர் பாரதியின் சீர்திருத்தங்களை மனதில் இருத்தி தன அரசு செயல்படுவதாக கூறினார். 

தமிழக பாஜக தலைவர் திரு. எல்.முருகன் அவர்கள் பேசுகையில் "எப்போதும் கர்வத்துடனே இரு. இங்கு யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதியார். மேலும், எண்ணிய முடிதல் வேண்டும் .. நல்லவை எண்ணல் வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும்,  

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் எனக் கூறி நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை வெற்றி பெற வைப்பவர் பாரதியார். அவருடைய பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவரை போற்றி வணங்குவோம் என்றார் தலைவர் எல்.முருகன்.  

Similar News