எலும்பை உருக்கும் குளிர் - டெல்லியின் மிகக்குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு!

எலும்பை உருக்கும் குளிர் - டெல்லியின் மிகக்குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு!

Update: 2021-01-01 17:08 GMT
 டெல்லி தற்போதைய குளிர்கால சீசனின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 1.1 டிகிரி செல்சியஸை இன்று பதிவு செய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், புதிய ஆண்டின் முதல் நாளில் டெல்லியில் அடர்த்தியான பனி மற்றும் உச்சகட்ட குளிர் நிலவியது. இது தேசிய தலைநகரம் மற்றும் என்.சி.ஆர் பிராந்தியத்தின் பல பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றது. 

காலை 7 மணி வரை டெல்லி பாலம் பகுதியில் எதிரில் எதுவுமே தெரியாத அளவில் மிகவும் அடர்த்தியான மூடுபனி இருந்தது. காலை 7 மணிக்குப் பிறகு, சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ளவை மட்டுமே காணப்படும் சூழல் நிலவியது.
"டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆய்வகத்தில் சமீபத்திய குறைந்தபட்ச வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் அடர்த்தியான மூடுபனி, காலை 6 மணிக்கு பூஜ்ஜியத் தெரிவுநிலை, தற்போது பாலம் மற்றும் சப்தர்ஜங்கில் 200 மீட்டருக்குக் கீழே தெரியும் தன்மை நிலவுகிறது" என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்தியத் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லியில் கடும் குளிர் நிலை தொடரும் என்று வானிலை துறை முன்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் காற்றின் தரக் குறியீடும் இன்று காலை மிகவும் மோசம் முதல் கடுமையான வகைக்கு இடையில் இருந்தது. காற்றின் தரக் குறியீட்டு அமைப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் இன்று 332 ஆக பதிவாகியுள்ளது. இது 0-50’க்கு இடையில் இருந்தால் நல்லது என்று பொருள்படும். மேலும் 51-100 திருப்திகரமாக உள்ளது. 101-200 மிதமானது. 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது மற்றும் 401-500 கடுமையானதாக கருதப்படுகிறது. 

Similar News