கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம் - மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : வரப்போகும் அசத்தல் திட்டம்!

Update: 2022-07-05 09:55 GMT

கோவா, கர்நாடகா எல்லைப்பகுதியிலிருந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை எண்.17-லில் உள்ள குந்தப்பூர் வரையிலான நான்கு வழிசாலை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதோடு, 'இணைப்பின் வாயிலாக செழிப்பு' என்ற யுகத்தை நோக்கி புதிய இந்தியாவை வழி நடத்திச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதாவது 92.42 சதவீதம் அளவிற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார். எஞ்சிய பணிகள் டிசம்பர் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 187 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பகுதியில் ஒரு புறம் அரபிக்கடல் கடற்கரையோரமும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ள இந்த கடற்கரையோர நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும் என்றும், விபத்துக்கள் தடுக்கப்படும் என்றும், எரி்பொருள் சேமிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மங்களூர், உடுப்பி, பனாஜி உள்ளிட்ட முக்கிய பேரூர் மற்றும் நகரங்களை இணைத்து பயணிகளுக்கு உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்பு அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பன்மடங்கு வாய்ப்புகளுடன், திட்டம் அமையவுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை வழங்க இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு முயற்சி உதவியுள்ளதாக தெரிவித்தார். உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

Input From: swarajyamag

Similar News