மத்திய பிரதேசம்: சந்தையில் அறிமுகமான பிரதமரின் வெள்ளி உருவச் சிலைகள் !
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக பிரதமரின் வெள்ளி உருவச் சிலைகளை செய்து விற்பனைக்கு வைத்துள்ள பா.ஜ.க தொண்டர்.
இந்தியாவின் பிரதமராக இருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் மூலமாக அவருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆதரவுகள் பலத்த வண்ணம் தான் இருக்கின்றது. இதில் பிரதமர் மோடியின் பல்வேறு நடவடிக்கைகள் அவரது தீவிர ஆதரவாளர்களால் பின்பற்றப்பட்டன. குறிப்பாக பா.ஜ.க தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள பற்று மிகவும் அளப்பரியது. உதாரணமாக சொன்னால், பிரதமர் மோடி, தனது குர்தா பைஜாமாவிற்கு மேலாக அணியும் முண்டாசு கோட், "மோடி ஜாக்கெட்" எனும் பெயரில் பிரபலமானது. மோடி அவர்களைப் பின்பற்றும் தொண்டர்கள் அவருடன் ஒவ்வொரு அசைவுகளையும் பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது, மத்தியப்பிரதேசத்தில் வெள்ளியிலான பிரதமர் நரேந்தர மோடியின் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோரின் இருக்கும் ஒரு நகை வியாபாரி 150 கிராம் எடையில் இச்சிலைகளை தயாரித்துள்ளார். இதை நகை வியாபாரியான நிர்மல் வர்மா அறிமுகப்படுத்தி உள்ளார். இவர், இந்தோர் பாஜகவின் வியாபாரப் பிரிவின் தலைவராகவும் உள்ளார். குறிப்பாக அந்த சிலையில் அவர் பிரதமர் அணிவது போல் குர்தாவை மட்டும் ஒவ்வொரு சிலையிலும் ஒரு வர்ணத்தில் அமைத்துள்ளார். குறைந்தது 150 கிராம் வெள்ளி எடையிலான இந்த சிலையின் விலை ரூ.11,000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவை தற்போது இந்த ஊரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை விரைவில் நாடு முழுவதிலும் உள்ள சந்தைகளில் அனுப்ப இருப்பதாக வியாபாரி நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார். இதற்காக அதிக எண்ணிக்கையிலான சிலைகளை தயாரிக்கும் பணியில் அவர் இறங்கியுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிராவில், புனே உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு கோயிலை கட்டியும் வணங்கி வருகின்றனர். இந்தவகையில், புதிதாக மோடியின் வெள்ளியிலான உருவச் சிலை சந்தைகளில் அறிமுகமாகி உள்ளது.
Input:https://thenewsglory.com/ silver-statues-of-prime-minister-modi-sold-in-madhya-pradesh/
Image courtesy:Newsglory