19,024 அடி உயரத்தில் இதுவரை எந்த நாடும் கட்டமைப்பை மேற்கொண்டதில்லை - கின்னஸ் உலக சாதனை அமைப்பை வியக்கச் செய்த இந்தியா!
BRO feat recognised by Guinness World Records
லடாக்கின் உம்லிங்கா கணவாயில் 19,024 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான போக்குவரத்து வாகன சாலையை அமைத்து எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாதனை புரிந்ததற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழை நவம்பர் 14 ஆம் தேதி எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரி பெற்றுக் கொண்டார்.
காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் திரு ரிஷிநாத் இந்த அங்கீகாரத்தை வழங்கினார். உலகின் மிக உயரமான இந்த சாலையை நான்கு மாத காலம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தச் சாலை, பொலிவியா நாட்டில் 18,953 அடி உயரத்தில் உள்ள உட்டுருங்கு எரிமலையை இணைக்கும் சாலையின் சாதனையை முறியடித்துள்ளது. பாதுகாப்பு ரீதியில் மிக முக்கியமான இந்த சாலை எல்லைப் பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு சான்றாக விளங்குகிறது.
16,900 அடி மற்றும் 17,598 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு தள முகாம்களை விட உயரத்தில் கட்டப்பட்டுள்ள உம்லிங்லா சாலை, இந்தியாவின் சாதனையில் மற்றொரு அடையாளமாகும்.
டிஜிபிஆர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி, உம்லிங்லா சாலை கட்டுமானத்தின் போது எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசினார். இந்த இடம் மனித உயிர் மற்றும் இயந்திரங்களின் செயல்திறன் இரண்டையும் மிகவும் கடினமாக சோதித்தது. அங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரி வரை குறைகிறது. ஆக்ஸிஜன் அளவு இயல்பை விட 50 சதவீதம் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் உள்ள முக்கியமான கிராமமான டெம்சோக்கிற்கு எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாலை அமைத்து கொடுத்துள்ளது. இது அப்பகுதியின் உள்ளூர் மக்களுக்கு ஒரு வரமாக இருக்கும். இது சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும். லடாக்கில் சுற்றுலாவை மேம்படுத்தும். சுமார் 15 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலை, எல்லைப் பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.