இந்தியாவுடன் மோதல் போக்கு.. சீனாவுக்கு நல்லதல்ல.. வார்னிங் செய்த விமானப்படை தலைமை தளபதி.!

இந்தியாவுடன் மோதல் போக்கு.. சீனாவுக்கு நல்லதல்ல.. வார்னிங் செய்த விமானப்படை தலைமை தளபதி.!

Update: 2020-12-30 13:10 GMT

இந்தியாவுடன், தீவிர மோதல் போக்கை கடைபிடிப்பது சீனாவுக்கு நல்லதல்ல என்று  விமானப் படை தலைமை தளபதி, ஆர்.கே.எஸ். பதவுரியா கூறியுள்ளார்.

லடாக் எல்லையில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பதற்றம் நிலை நீடிக்கிறது. இது குறித்து விமானப் படை தளபதி பதவுரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் தன்னை முன்னிலைப் படுத்த சீனா விரும்புகிறது. அதற்கு, இந்தியாவுடன் நல்லுறவை பேணுவது அவசியம். அதை விடுத்து தீவிர மோதல் போக்கை பின்பற்றும் பட்சத்தில் அது சீனாவிற்கு நன்மை பயக்காது.

எல்லை நடவடிக்கைகளால் சீனா எதை சாதிக்கத் துடிக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. சீனா பொது எல்லை கோடு அருகே ஏராளமான ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது. ‘ராடார்கள்’ பல வகை ஏவுகணைகள் காணப்படுகின்றன. இந்த வலிமையான படைகளை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், இந்தியா எடுத்துள்ளது.

சர்வதேச அளவில் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. இது, தன் வலிமையை உலகிற்கு பறைசாற்ற, சீனாவுக்கு வாய்ப்பளித்துள்ளது. அத்துடன் சர்வதேச பாதுகாப்புக்கு போதிய பங்களிப்பை வழங்க முடியாத, வல்லரசு நாடுகளின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது. சீனாவின் கடன் வலையில் சிக்கி அதன் கைப்பாவையாக பாகிஸ்தான் மாறி விட்டது. இதனால் வருங்காலங்களில் பாகிஸ்தானில், சீன ராணுவத்தின் ஆளுமை அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
 

Similar News