உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா... குடியரசுத் தலைவர் பெருமிதம்...
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் உரை.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானாவின் கர்னாலில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நமது நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பால் உற்பத்தித் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். பால் உற்பத்தித் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியாவில் உள்ள சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு இத்துறை வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று அவர் கூறினார். தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் (என்.டி.ஆர்.ஐ) போன்ற நிறுவனங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். பசுக்கள் மற்றும் பிற கால்நடைகள் இந்திய சமூகம் மற்றும் மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதிக பால் தரும் எருமைகள் மற்றும் பசுக்களின் நகல் மரபணுக்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை என்.டி.ஆர்.ஐ உருவாக்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
இது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். பால் மற்றும் பால் பொருட்கள் எப்போதுமே இந்திய உணவு மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன என்று குடியரசுத்தலைவர் கூறினார். உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News