கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை! ஏன் இந்த நிதானம் தெரியுமா?

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை! ஏன் இந்த நிதானம் தெரியுமா?

Update: 2020-12-31 07:50 GMT

அஸ்ட்ராசெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசிக்கு இங்கிலாந்து அவசர அங்கீகாரம் வழங்கிய நிலையில், இந்தியா சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் வழங்கிய தடுப்பூசி தகவல்களுடன், கூடுதல் தரவுகளை பகுப்பாய்வு செய்ய கால அவகாசம் கோரியுள்ளது. இதனை சுகாதார அமைச்சகம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த்தொற்றுகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு விரைவில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் பெற, இதுவரையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.

இந்த நிலையில் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஆயிரம் ரூபாய் என்ற மலிவு விலையில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய அரசு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துடன், இன்னும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இருந்தாலும் சீரம் நிறுவனம் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளது. அதற்கு பின்னரே தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் கூறி வருகிறது.

தற்போதைய சூழலில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிக்கு  இந்தியா அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கவில்லை. தடுப்பூசி விவரங்கள் குறித்து கூடுதல் தகவல் கேட்கப்பட்டுள்ளதால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்த நிலையில், இந்தியா இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அங்கீகாரக் கோரிக்கையை பரிசீலிக்க ஜனவரி 1 ஆம் தேதி நிபுணர் குழு கூட உள்ளது.

அப்போது முடிவுகள் தெரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தடுப்பூசியை அங்கீகரிப்பது மக்கள் உயிரை பணையம் வைக்கும் முடிவு என்பதால், இந்த விவகாரத்தில் இந்தியா மிகக்கவனமாக செயல்படுகிறது.

Similar News