தமிழக, உ.பி பாதுகாப்பு தளவாட வழித்தடங்கள் ரூ 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் - தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட்!
2018-19 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, இந்த வழித்தடங்களை உத்தரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை அமைப்பதாக 2018-19 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, இந்த வழித்தடங்களை உத்தரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக அலிகார், ஆக்ரா, சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய ஆறு முனைகளும், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து முனைகளும் அடையாளம் காணப்பட்டன.
இரு மாநிலங்களிலும் ரூ 20,000 கோடி மதிப்புள்ள முதலீட்டை 2024-25-ம் ஆண்டிற்குள் ஈர்ப்பதை இந்த வழித்தடங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. வழித்தடத்திற்கு தேவையான நிலங்கள், இணைப்பு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.
இந்த இரண்டு வழித்தடங்களில் முதலீடு செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை அளிப்பதற்க்காகவும் தத்தமது விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
மேலும் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன், பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக அரசு பல கொள்கை முயற்சிகளை எடுத்து சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
ராணுவ தளவாடங்கள் கொள்முதல் நடைமுறை-2020-ன் கீழ் உள்நாட்டு ஆதாரங்களிலிருந்து மூலதனப் பொருட்களை வாங்குவதற்கு முன்னுரிமை; 209 பொருட்களின் உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்கள் அறிவிப்பு; நீண்ட கால தொழில்துறை உரிம செயல்முறையை எளிதாக்குதல்; அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் தாராளமயமாக்கல்; செயல்முறையை எளிதாக்குதல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய ஐடெக்ஸ் திட்டம்; உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒன்று என இரண்டு பாதுகாப்பு தளவாடங்கள் வழித்தடங்களை நிறுவுதல் ஆகியவை இவற்றில் அடங்கும்.