விவசாயிகள் பேரணிக்கு நிபந்தனையுடன் டெல்லி போலீஸ் அனுமதி.!

விவசாயிகள் பேரணிக்கு நிபந்தனையுடன் டெல்லி போலீஸ் அனுமதி.!

Update: 2021-01-24 18:39 GMT

இந்திய குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு நிபந்தனையுடன் டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 மாதங்களாக டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

மேலும், ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தின விழா வருகிறது. அப்போது ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், குடியரசு தினம் அன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்துவதற்கு விவசாயிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்சநீதிமன்றம் டெல்லி போலீசாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என தனது தீர்ப்பில் கூறியது.

இந்நிலையில், குடியரசு தினத்தின்போது விவசாயிகள் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியை டெல்லி போலீசார் வழங்கியுள்ளனர். அதாவது 3 வழிகளில் பேரணி நடத்தி கொள்ளலாம் எனவும், இந்த பேரணி அமைதியாக நடப்பதை விவசாய சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

டிக்ரி, சிங்கு, காசிப்பூர் பகுதிகளில் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். அந்த பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்புகள் மட்டும் அகற்றப்படும் என கூறினர்.

போலீசார் அனுமதி வழங்கியதை தொடர்ந்து விவசாயிகள் தற்பொழுது இருந்தே டிராக்டர்களை பிரதான சாலைகளில் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். எந்த முறையும் இது போன்று விவசாயிகளின் டிராக்டர்களை அணிவகுப்பில் அனுமதித்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News