மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கிறதா? உள்துறை அமைச்சகத்தின் விளக்கம்!

மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கிறதா? உள்துறை அமைச்சகத்தின் விளக்கம்!

Update: 2021-02-03 07:31 GMT

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, நாட்டில் மதமாற்றச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது.  உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் கொண்டுவந்த மதமாற்ற சட்டங்களுக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மற்றும் கர்நாடகாவும் இதேபோன்ற ஒரு சட்டத்தை விரைவில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன.  மத்திய உள்துறை அமைச்சகத்திடம், கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஜிகாத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பதில் அரசாங்கத்தின் கருத்து இருக்கிறதா என்றும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்றும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம்,  "பொது ஒழுங்கு" மற்றும் "காவல்" ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மாநில கட்டுப்பாட்டில் வரும்.

எனவே மத மாற்றங்கள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பது, கண்டறிதல், பதிவு செய்தல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுப்பது மாநில அரசாங்கங்கள் / யூனியன் பிரதேசம் (யுடி) நிர்வாகங்கள் முயற்சியில் மட்டுமே நடக்கும். வரம்பு மீறல் சம்பவங்கள் கவனிக்கப்படும்போதெல்லாம் தற்போதுள்ள சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, "நேர்மையற்ற" முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் .

Similar News