G20 அமைப்பின் எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம்: 9 நாடுகளை சிறப்பு விருந்தினராக அழைத்த இந்தியா!
G20 அமைப்பின் எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம் பிப்ரவரி 5 முதல் 7 வரை நடைபெறும்.
இந்தியா தலைமையிலான G20 அமைப்பின் முதலாவது எரிசக்தி மாற்ற பணிக் குழு கூட்டம் பெங்களூருவில் பிப்ரவரி 5 முதல் 7 வரை நடைபெறும். G20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்களாதேஷ், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய 9 சிறப்பு அழைப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் இதில் கலந்து கொள்வார்கள்.
இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், சர்வதேச எரிசக்தி முகமை, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், சர்வதேச சூரிய ஒளிசக்தி கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் இந்த பணிக் குழு கூட்டத்தில் பங்கேற்கும்.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மூத்த அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள். தொழில்நுட்ப இடைவெளிகளைக் குறைப்பதன் வாயிலாக எரிசக்தி மாற்றம்; எரிசக்தி மாற்றத்திற்கு குறைந்த நிதி செலவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பன்முகப் படுத்தப்பட்ட விநியோக சங்கிலிகள்; எரிசக்தி செயல் திறன், தொழில் துறையில் குறைந்த கார்பனை நோக்கிய மாற்றங்கள் மற்றும் பொறுப்பான பயன்பாடு, எதிர் காலத்திற்கான எரிபொருட்கள், தூய எரிசக்திக்கான உலகளாவிய அணுகுமுறை மற்றும் நியாயமான, மலிவான விலையில், உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்திற்கான வழிகள் ஆகிய ஆறு துறைகளுக்கு பணிக் குழு கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
Input & Image courtesy: News