கடவுளாக மாறிய காக்கிச்சட்டை: ஓடும் ரயில் பயணிக்கு மாரடைப்பு - கைகளில் ஏந்திச்சென்ற காவலர்!

கடவுளாக மாறிய காக்கிச்சட்டை: ஓடும் ரயில் பயணிக்கு மாரடைப்பு - கைகளில் ஏந்திச்சென்ற காவலர்!

Update: 2021-01-21 17:23 GMT
ஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண் பயணியை காவலர் ஒருவர் கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் வடகராவில் இருந்து திருச்சூருக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வடகராவில் இருந்து திருச்சூருக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனிதா என்ற பெண் பயணி பயணம் செய்தார்.

திருச்சூர் அருகே ரயில் சென்ற போது அவர் ரயிலில் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதை கவனித்த சக பயணிகள் இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரயில்வே போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீஸ் அதிகாரிகள் திருச்சூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டனர்.

அந்த ரயில் திருச்சூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ஓமணக்குட்டன் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். வீல் சேர், ஸ்டெச்சர் போன்றவற்றிற்கு காத்திருக்காமல் அவரே உடனடியாக ரயில் பெட்டிக்குள் நுழைந்தார். அங்கு மயக்க நிலையில் இருந்த அந்த பெண் பயணியை மீட்டு கைகளில் தூக்கிச் சென்றார். தயாராக இருந்த மருத்துவர்கள் திருச்சூர் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அந்த பயணி திருச்சூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ரயில் பயணத்தில் அந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

பெண் பயணியை உரிய நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே காவலர் ஓமணகுட்டனை போலீஸ் அதிகாரிகளும், மருத்துவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண் பயணியை காவலர் ஓமணகுட்டன் இரண்டு கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Similar News