தொடர்ச்சியாக 19 முறை குலுங்கிய பூமி -  நிலநடுக்கத்தினால் அதிர்ந்த குஜராத்.!

தொடர்ச்சியாக 19 முறை குலுங்கிய பூமி -  நிலநடுக்கத்தினால் அதிர்ந்த குஜராத்.!

Update: 2020-12-07 16:33 GMT

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.7 முதல் 3.3 ரிக்டர் வரையிலான 19 பூகம்பங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதில் எந்தவொரு விபத்து, சொத்து இழப்பு குறித்து எந்த அறிக்கையும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். காந்திநகரைத் தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISR) மூத்த அதிகாரி ஒருவர் இந்த நிகழ்வுகளை பருவமழையால் தூண்டப்பட்ட நில அதிர்வு என்று அழைத்தார்.

பொதுவாக குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்கள் பெய்த கனமழைக்குப் பிறகு இது வழக்கமாக ஏற்படும் ஒன்று தான் எனவும், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறினார். இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவிற்குக் குறைவானவை என்றாலும், ஆறு நிலநடுக்கங்கள் 3 ரிக்டருக்கும் மேற்பட்ட தீவிரமானவை ஆகும். இதில் உச்சபட்சமாக 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது.

"இது ஒரு பருவமழையால் தூண்டப்பட்ட நில அதிர்வு. பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, ​​இரண்டு மூன்று மாத மழைக்குப் பிறகு இதுபோன்ற நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றன"  என்று ISR இயக்குனர் சுமர் சோப்ரா கூறினார். அதிர்வெண் மாறுபடும். ஆனால் கிர் சோம்நாத் மாவட்டத்தில் தலாலாவிலும், முன்பு இதேபோன்ற செயல்பாட்டை அனுபவித்த போர்பந்தர் மற்றும் ஜாம்நகரிலும் இந்த காலகட்டத்தில் பொதுவாக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இப்போது அது குறைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

சமீபத்தில், போர்பந்தரில் இதே போன்ற நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை இதற்கு முன்பு அங்கு காணப்படவில்லை. இந்த பகுதிகளில் உள்ள பாறைகள் முறிந்துவிட்டன. பாறை பிளவுகளுக்குள் நீர் புகுந்து வெளியேறும்போது, ​​துளை அழுத்தம் உருவாகிறது. இதனால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது.  இது சிறிய விசயம் மற்றும் இதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

எனினும் 19 முறை தொடர்ச்சியாக பூமி அதிர்வால் 2001 இல் ஏற்பட்ட பூகம்பம் போன்ற சூழல் உருவாகிறதோ என மக்கள் பீதியில் உறைந்தனர். அதிகாரிகளின் விளக்கத்திற்கு பிறகே இது குறித்து தெளிவு கிடைத்து மக்கள் நிம்மதியடைந்தனர். 

Similar News