குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வு தீவிரம் ! சுகாதாரத்துறை தகவல் !
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும்.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தடுப்பூசி ஒன்றுதான் அவர்களுக்கு முழு பாதுகாப்பை கொடுக்க முடியும். எனவே குழந்தைகளுக்கான தடுப்பூசியை தீவிரப் படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தற்போது களம் இறங்கியுள்ளது.
இனி விரைவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், "தற்போது இந்தியா முழுவதும் இதுவரை 50 கோடிக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்வதற்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஒரு நாளைக்கு 2.5 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால், இது இன்று ஒரு நாளைக்கு 40 லட்சமாக அதிகரித்துள்ளது. உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால் இன்னும் சிறந்த முறையில் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என நினைக்கிறேன். மேலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்" என்று கூறினார். பிறகு இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் கூறுகையில், "இந்தியா முழுவதும் 50 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது பெருமையாகவுள்ளது. அதற்காக ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள்தான் தடுப்பூசி மிகவும் அவசியம் என்ற செய்தியை மக்களிடம் சேர்த்துள்ளீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Image courtesy: times now news