மோடி தலைமையிலான அரசில் மிக வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!
மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதார பற்றி ஒரு அலசலை காண்போம்.
கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற காரணங்களால் வளர்ந்த நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியால் திணறிவருகின்றன. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்தியப் பொருளாதாரம் கடந்த வந்த பாதை: இந்தியர்கள் பொதுவாகச் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட பொருளாதார நிலையை உயர்த்தினாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக விளங்குகிறது. அதனால்தான் சர்வதேச மந்தநிலைக்கு நடுவிலும் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக இருந்தாலும், பொதுமக்களின் சேமிக்கும் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு மேலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் ’மேக் இன் இந்தியா’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும் என அரசு கருதியது. பல்வேறு வகையான வரி நடைமுறைகளை மாற்றி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஸ்டார்ட்-அப் இந்தியா, முத்ரா கடன், உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டம் எனத் தொழில் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அந்நியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவுசெய்தது.
உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டில் உலக அளவில் ஜிடிபி அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 5ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 3.75 லட்சம் கோடி டாலராகி (ரூ.311 லட்சம் கோடி) உள்ளது. 5ஆம் இடத்தில் இருந்த பிரிட்டன் 6ஆம் இடத்துக்குப் பின்தங்கி உள்ளது.