கேரள முதல்வர் பங்கேற்கும் விழாக்களில் கருப்பு ஆடை, மாஸ்க் அணிய தடை - இல்லாத காரணம் சொல்லும் பினராயி விஜயன்!

Update: 2022-06-14 07:59 GMT

கேரள தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துவருகிறார்.

பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகவும், அது பற்றி கோர்ட்டில் வாக்குமூலம் அளித்ததால், அவர் சார்பில் ஒருவர் வீடு தேடி வந்து மிரட்டியதாகவும் ஸ்வப்னா தெரிவித்திருந்தார்.

ஸ்வப்னாவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ.கட்சியினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

 இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கறுப்பு ஆடைகள் அணியக் கூடாது, கறுப்பு மாஸ்க் அணியக் கூடாது என்று போலீஸார் கெடுபிடி காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கறுப்பு நிற மாஸ்க், உடை அணிந்து முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற சிலர் தடுக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. கறுப்பு ஆடைக்கு தடை விதித்தது சம்பந்தமாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அப்படி எல்லாம் நடக்கவில்லை என பினராயி விஜயன் வீடியோ வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஆதாரங்களுடன் பல வீடியோக்கள் வெளியான நிலையில், மறுப்பு தெரிவித்துள்ளார்.  

Inputs From: Vikadan 

Similar News