தேசிய போலியோ நோய்த் தடுப்புத் திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு -  காரணம் இது தானா?

தேசிய போலியோ நோய்த் தடுப்புத் திட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு -  காரணம் இது தானா?

Update: 2021-01-13 16:54 GMT

தேசிய போலியோ நோய்த்தடுப்பு திட்டதின் ஒரு பகுதியாக 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் எதிர்பாராத செயல்களை மேற்கோள் காட்டி, மத்திய அரசு அடுத்த அறிவிப்பு வரும் வரை, திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு திட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம் ஜனவரி 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலியோ நோய்த்தடுப்பு திட்டத்தை அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்திவைக்கும் முடிவை மத்திய சுகாதார அமைச்சகம் ஜனவரி 9 ஆம் தேதி ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. "எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக, திட்டமிடப்பட்ட போலியோ தடுப்பூசி திட்டத்தை ஜனவரி 17, 2021 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக போலியோ நோய்த்தடுப்பு மருந்து ஜனவரி 17 ஆம் தேதி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஜனவரி 8 ஆம் தேதி தெரிவித்திருந்தார். போலியோ வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை நாடு பராமரிக்கிறது என்பதை உறுதிப்படுத்த இந்த தடுப்பூசி மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமான கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியாவில் ஜனவரி 16 முதல் செயல்படுத்த உள்ளதால், போலியோ தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மத்திய அரசு இது தான் காரணம் என அறிவிக்காமல்,  எதிர்பாராத செயல்களால் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News