பயிற்சியுடன் கல்வீச்சுக்கு ரூ.500, குண்டு வீசினால் ரூ.5,000: உத்தர பிரதேச வன்முறை குறித்து எஸ்.ஐ.டி அறிக்கை!
பா.ஜ.க., பிரமுகர் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒருவார பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு கல்வீசுவதற்கு ரூ.500 மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ரூ.5,000 வழங்குவதாக எஸ்.ஐ.டி. சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்துக்கள் குறித்து தவறாக பேசியதற்கு பா.ஜ.க., செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாமியர்கள் குறித்து சில கருத்துக்களை கூறினார். இதற்கு இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி போராட்டங்களை முன்னெடுத்தனர். உடனடியாக நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவம் நடைபெற்றது.
அதாவது கான்பூர், சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர் உட்பட பல்வேறு இடங்களில் ஜூன் மாத துவக்கத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இப்போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த வன்முறை சம்பவங்களில் ஏராளமான கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இவர்களை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தின்போது சிறுவர்கள் போலீசார் மீது கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய பின்னர் குற்றவாளிகளை தேடி கைது செய்து வந்தனர். மேலும், வன்முறைக்கு காரணமானவர்களின் வீடுகளில் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுவரையில் வன்முறை தொடர்பாக 60க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக உபி போலீசார் கூறினர்.
இந்நிலையில், ஜூன் 3ம் தேதி கான்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிலருக்கு பணம் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.