உலகிலேயே இந்திய வனங்களில்தான் சிறுத்தைகள் பாதுகாப்பு சூப்பர்! நான்கு ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்வு!

உலகிலேயே இந்திய வனங்களில்தான் சிறுத்தைகள் பாதுகாப்பு சூப்பர்! நான்கு ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்வு!

Update: 2020-12-22 11:34 GMT

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த 100 ஆண்டுகளில் 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சென்ற பிப்ரவரி மாதம் ஒரு தகவல் வெளியானது.  பெங்களூருவில் உள்ள, வன உயிரின கல்வி மையம் மற்றும் டேராடூனில் உள்ள, இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தகவல் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.

அந்த ஆய்வில் கடைசியாக 2014-ல் புலிகள் கணக்கெடுப்புடன் எடுக்கப்பட்ட சிறுத்தைகள் கணக்கெடுப்பில் 12,000 முதல் 14,000 வரை சிறுத்தைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே சிறுத்தைகள் இருப்பதாகத் தெரிகிறது என அந்த ஆய்வு கூறியது. 

சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி உட்பட நாட்டின் பல வனப்பகுதிகளில் இடங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் இவர்கள் எந்த முறையில் கணக்கெடுப்பு செய்தார்கள், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக தங்களது ஆய்வை நடத்தினார்களா, சிறுத்தைகளின் தற்போதைய துல்லியமான எண்ணிக்கை குறித்து போதுமான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறப்பட்டது. 

இந்த தனியார் ஆய்வு குறித்த தகவல்கள்  இயற்கை நேயர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  நாட்டில் புலி பாதுகாப்பு போல சிறுத்தைகளை பாதுகாக்க வேண்டும், இல்லையெனில் அது படிப்படியாக ஒழியும் என்று வன உயிர் ஆர்வலர்கள் கவலையுடன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை, நவீன கருவிகள், மற்றும் மென்பொருளுடன் இணைக்கப்பட்ட கேமிராக்களின் உதவிகளுடன் கிழக்கிந்திய மலை வனப்பகுதிகள், தமிழகம் உட்பட மேற்குதொடர்ச்சி மலை  பகுதிகள் , மத்திய பிரதேச வனப்பகுதிகள்,  சிவாலிக் மலைகள், வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி உட்பட ஒரு இடம் கூட விடாமல் கடந்த ஓராண்டாக விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டில்லியில் வெளியிட்டார். அப்போது அவர் நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும்,  நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

புலி, சிங்கம், சிறுத்தைகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பெருக்க வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.

இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது. தற்போது 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிக எண்ணிக்கையில்  முறையே 3,421, 1,783 1,690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.

மேலும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா பகுதிகள் அடங்கிய மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் 3,387 எண்ணிக்கையிலும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பிகார், ஷிவாலிக், கங்கை சமவெளி காடுகளில் 1253 சிறுத்தைகளும் வடகிழக்கு மாநில வனப்பகுதிகளில் 141சிறுத்தைகள் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளுடனும், பிற நாடுகளுடனும் ஒப்பிடும்போது நம் நாட்டில் விலங்குகள் தொடர்பான சூழல் சிறந்த முறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News