மகுடம் சூடபோகும் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி: கலந்து கொள்ள போகும் முக்கிய அமைச்சர்கள்!
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் தொடர்பான தேசிய மாநாட்டுக்கு மத்திய அமைச்சகம் ஏற்பாடு.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம் தொடர்பான தேசிய மாநாட்டுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் நடைபெறும் இந்த மாநாட்டை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களிடையே தமது கருத்துகளை அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும், பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி இம்மாதத்துடன் 100வது அத்தியாயத்தை எட்டுவதையொட்டி இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த நபர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டி தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களும், இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பிரதமரின் மனதின் குரல் உரை தொடர்பான இரண்டு நூல்களையும் குடியரசு துணைத்தலைவர் வெளியிட உள்ளார். தொடக்க அமர்வுக்கு பின்னர், நான்கு குழு விவாத அமர்வுகள் நடைபெறவுள்ளன. முதலாவது அமர்வில், மகளிர் சக்தி தொடர்பாக, விவாதிக்கப்படுகிறது. இரண்டாவது அமர்வு, கலாச்சாரம் தொடர்பாகவும், 3-வது அமர்வு, தற்சார்பு இந்தியா தொடர்பான கருப்பொருளிலும், 4-வது அமர்வு, மக்கள் பங்கேற்பு இயக்கங்கள் தொடர்பான கருப்பொருளிலும் நடைபெறுகிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த அம்சங்கள் தொடர்பாக பிரதமர் பேசியதன் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற உள்ளன.
அதைத்தொடர்ந்து நடைபெறும் நிறைவு அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதிதுறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர். நிறைவு அமர்வின் போது மனதின் குரல் நிகழ்ச்சியில் 100-வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில், அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிடப்படுகிறது.
Input & Image courtesy: News