பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு பேருந்துக்கு தீ வைத்து மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் கொன்டா பகுதிக் குழு உறுப்பினர்கள், அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள சிந்தூர் சரிவேலா அருகே, தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளையும் பேருந்தில் இருந்து இறங்கச் சொல்லி தனியார் பேருந்திற்கு தீ வைத்தனர்.
ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் ஜெய்பூரைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய பெண் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாகவும், சிறு தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
ஹைதராபாத் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. சிந்தூர் காவல்துறை தலைமையகத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சரிவேலா-கொத்துரு பகுதியை மாவோயிஸ்டுகள் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நடுவழியில் நின்று கொண்டிருந்த 40 பயணிகளை வேறு பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டகாரண்யா மண்டலத்தில் செயல்படும் கோண்டா பகுதி கமிட்டி உறுப்பினர்களால் இது நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர், எந்த உயிரிழப்பும் இல்லை. மற்றும் விசாரணை நடந்து வருகிறது என சிந்தூர் ஏஎஸ்பி ஜி. கிருஷ்ணகாந்த் கூறினார்.
Inputs From: News18