டெல்லியில் நுழைந்த மாவோயிஸ்டுகள்.. கலவரம் வெடிக்கும் ஆபத்து.. விவசாயிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லியில் நுழைந்த மாவோயிஸ்டுகள்.. கலவரம் வெடிக்கும் ஆபத்து.. விவசாயிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.!

Update: 2020-12-12 17:09 GMT

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுவியிருப்பதாக- மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கும், விவசாயிகளிடம் இதுவரை 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.

தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக டெல்லி எல்லைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு மேற்கொண்டார்.

Similar News