ஆந்திராவில் மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டதன் காரணம் - வெளியான மருத்துவ ரிபோர்ட்!

ஆந்திராவில் மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டதன் காரணம் - வெளியான மருத்துவ ரிபோர்ட்!

Update: 2020-12-09 08:15 GMT

ஆந்திராவில் மக்கள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டதன் காரணம் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒரு விரிவான அறிக்கையை எய்ம்ஸ் வல்லுநர்கள் முன்வைத்துள்ளனர்.

எலுருவில் மர்ம நோய்க்கு காரணம், அப்பகுதியில் குடிநீர் மற்றும் பாலில் ஈயம் மற்றும் நிக்கல் இருப்பதே காரணமாகும். இந்த மர்ம நோய் இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் குழு செவ்வாய்க்கிழமை முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஒரு விரிவான அறிக்கையை வழங்கியது. மர்மமான நோய் காரணமாக கிட்டத்தட்ட 160 பேர் எலுரு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நோயாளிகளின் உடல்களில் உள்ள ஹெவி மெட்டல் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவும், சிகிச்சை முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அறிக்கையின்படி, நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் குமட்டல், 3-5 நிமிடங்களுக்கு வலிப்பு நோய், சில நிமிடங்களுக்கு நினைவாற்றல் இழப்பு, பதட்டம், வாந்தி, தலைவலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன, விரைவில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மர்ம நோய் ஆந்திராவில் கண்டறியப்பட்ட உடனேயே, அது குறித்து விசாரிக்க மத்திய அரசைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு ஆந்திராவுக்கு விரைந்து சென்றது. துணைத் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுடன் பேசியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்களன்று எலுருவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பயணம் செய்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 12 வயதிற்கு உட்பட்ட சுமார் 45 குழந்தைகள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு மர்ம நோய்க்கான காரணத்தை மறைப்பதாக தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) குற்றம் சாட்டியுள்ளது.

Similar News