பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு மோடி பதவியேற்றார். அதன் பின்னர் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனால் மீண்டும் 2வது முறையாக மத்தியில் பாஜகவே ஆட்சி தொடர்ந்து வருகிறது. இதனிடையே பிரதமராக பதவி ஏற்று அடுத்த மாதம் மே 26ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனால் பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுகள் சாதனைகள் அடங்கிய அறிக்கையை வெளியிடுவதற்கு பாஜக முடிவு செய்துள்ளது.
இதற்கு என்று மத்திய தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு மோடி அரசு இதுவரையில் செய்த சாதனைகளை சேகரித்து வருகிறது.
பிரதமர் மோடி இதுவரைக்கும் நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சமீபத்தில் உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் இதில் அடங்கும். மேலும், காப்பீடு திட்டங்களினால் பொதுமக்கள் அடைந்த பலன்கள், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு மானியம் உட்பட எண்ணற்ற திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதன்படி பிரதமர் மோடி அரசு மூலம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்ட சாதனைகள் அடங்கிய அறிக்கை பிரதமராக முதன் முதலில் பதவி ஏற்ற மே 26ம் தேதி பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்படுகிறது.
Source: Maalaimalar
Image Courtesy:The Economic Times