பொது சிவில் சட்டம் வேண்டவே வேண்டாம் - முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்க்க காரணம் என்ன?
அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரே மாதிரியான சிவில் கோட் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்றும் கூறியது. அது முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ஹஸ்ரத் மௌலானா காலித் சைபுல்லா ரஹ்மானி, அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக குடிமக்கள் தங்கள் மதத்தின்படி வாழ இந்திய அரசியலமைப்பு அனுமதித்துள்ளது என்று கூறினார். "அதே உரிமையின் கீழ், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் மரபுகளின்படி தனித்தனி தனிநபர் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன, இது அரசியலமைப்பில் எந்த வகையிலும் தலையிடாது," என்று அவர் கூறினார்.
சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை பேணுவதற்கு தனிநபர் சட்ட வாரியம் உதவுகிறது என்றும் அவர் கூறினார். பொது சிவில் சட்டம் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அவர் கூறினார். இந்த அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.
உத்தரகாண்ட் அரசாங்கம் ஏற்கனவே பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. உத்தரகாண்ட் தவிர, உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசும் அதனை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போபாலில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தனது அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளார் .