புதிய வேளாண் சட்டங்கள் EX. பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி செய்த திட்டங்கள்தான் - மத்திய அமைச்சர் தகவல்.!

புதிய வேளாண் சட்டங்கள் EX. பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி செய்த திட்டங்கள்தான் - மத்திய அமைச்சர் தகவல்.!

Update: 2020-12-15 15:09 GMT

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை எதிர்கட்சிகள் மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் தூண்டி விட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் அவர்கள் கடந்த பதினெட்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  உத்தரகாண்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமீபத்தில் டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து, புதிய சட்டங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது அவர்கள் இந்த சட்டங்கள் நாங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தவை. நாடு முழுவதும் இதற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இது காலத்துக் கேற்ற நவீன சட்டங்களாகும். இதன் மூலம் விளைபொருள் விற்பனை முறைகள் நவீனமுறையில் மாற்றப்படுவதால் விவசாயிகள் வாழ்க்கை மேம்படும், எனவே எக்காரணத்தைக் கொண்டும் இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கூடாது என தெவித்தனர். 

அப்போது பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது, மத்திய அரசு இதேபோன்ற எதிர்ப்புகளை சந்தித்தது. இதைப்போல குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ராமர் கோவில் விவகாரங்களிலும் கடும் எதிர்ப்புகளை தேவை இன்றி ஏற்படுத்தினர். 

அதேபோலவே இப்போது வேளாண் சீர்திருத்த சட்டங்களை கொண்டு வந்தபோதும், எதிர்ப்புகள் வருகின்றன. மத்திய அரசு எதை செய்தாலும்  வெறும் எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கு என்றே சில கட்சிகள் உள்ளன. அவர்கள் நாட்டை பலவீனபப்டுத்த  முயல்கின்றனர். எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது அவர்களது வழக்கமாகி விட்டது.

வேளாண் சீர்திருத்தங்களை பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாகவே இது தொடர்பாக விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. 

ஒரு புதிய இந்தியாவுக்கு, இத்தகைய சீர்திருத்தங்கள் அவசியம். இந்த சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கு நீண்ட காலத்துக்கு பலனளிக்கும். ஆனால் குறுகிய கால அடிப்படையில், இவற்றால் சில சிறிய அளவில் சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் வலி இல்லாமல் நன்மைகளை அடைய முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

எந்த ஒரு சிறந்த அரசோ அல்லது சிறந்த தலைவரோ நாட்டின் பாதுகாப்பு மட்டுமின்றி, அடுத்த நூறாண்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டே திட்டங்களை செயல்படுத்துவார்கள். அதைப்போலவே நீண்டகால பலன்களை மனதில் வைத்தே இந்த சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக இதற்கு முன்பிருந்த அரசுகள் இந்த சீர்திருத்தங்களை கொண்டு வர முயன்றும் அது முடியவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட, இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த பலமுறை முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அவரை செயல்பட விடாமல் பல சக்திகள் முடக்கி விட்டன. 

ஆனால் தற்போது இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வந்தபின், எதிர்க்கட்சிகளால் அது குறித்து தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. எனவே இரட்டை வேடம் போடும் கட்சிகளை நம்பாமல் விவசாயிகள் அரசை நம்ப வேண்டும் என்று கூறினார் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.

   


 

Similar News