குழந்தையின் வாழ்க்கைக்கு அடித்தளம் பள்ளிக்கல்வி... மாஸ் காட்டும் தேசிய கல்விக் கொள்கை!
பள்ளிக்கல்விக்கான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய கல்வித்துறை அழைப்பு.
பள்ளிக்கல்விக்கான தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. பள்ளி கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை உள்ளடக்கிய இந்திய கல்வி முறையில் முழுமையான மாற்றத்தை உருவாக்குவதே, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் நோக்கமாகும். ஏனெனில் குழந்தைகளின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதே பள்ளிக்கல்வி தான். உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் என்பதை உள்ளடக்கிய கல்வி அமைப்பை 5+3+3+4 -ஆக மாற்ற வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையாகும்.
மேலும் அடிப்படை, தொடக்கம், நடுநிலை மற்றும் மேல்நிலை என நான்கு பிரிவுகளின் கீழ் கல்வி அமைப்பை மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்இபி, ஒருங்கிணைந்த கலாச்சார அடித்தளம், சமமான கல்வி, பல மொழிகளை உள்ளடக்கிய கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, புத்தகச்சுமையைக் குறைத்தல், கலை மற்றும் விளையாட்டுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அளித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. NEP 2020-ன் தொடர்ச்சியாக, மழலையர் கல்வி, பள்ளிக்கல்வி, ஆசிரியர் கல்வி, இளையோர் கல்வி ஆகியவற்றிற்கான தேசிய பாடத்திட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசிய வழிகாட்டும் குழுவின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தேசிய பாடத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக பல்வேறு அமைச்சகங்கள் வாயிலாக 500க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை நேரில் வழங்கினர். செல்போன் செயலி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியியல் நிபுணர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். அதன்படி தற்பொழுது தேசிய கல்விக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News