புதிய வகை கொரோனா.. இந்திய குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் கலந்து கொள்வாரா.?

புதிய வகை கொரோனா.. இந்திய குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் கலந்து கொள்வாரா.?

Update: 2020-12-23 10:13 GMT

இங்கிலாந்தில் புதியதாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதாக கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளதால், இந்தியா உட்பட சுமார் 40 நாடுகள் அந்நாட்டுடான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனை உறுதி செய்வதுபோன்று, இந்திய குடியரசு தின விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அந்நாட்டு மூத்த மருத்துவர்கள் கூறிவருகின்றனர். தற்போது நாடு இக்கட்டான சூழல் நிலவி வருவதால் அடுத்த நாட்டிற்கு செல்வதற்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் கவுன்சிலின் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் இது தொடர்பாக கூறுகையில், இந்தியாவில் ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் செல்லக் கூடாது என்று தெரிவித்தார். அதே சமயம் இங்கிலாந்து அரசு இதுவரை இது தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

ஆகவே ஜனவரி 26ம் தேதியன்று நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வது சந்தேகம்தான். ஏற்கெனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News