வெளியானது ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழுவில் முதல் அறிக்கை!

Update: 2023-09-24 01:30 GMT

ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது, அதன் அறிக்கையும் தற்போது வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை மையமாகக் கொண்டதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல், இது மத்தியில் ஆளும் பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை டெல்லியில் உள்ள ஜோத்பூர் அலுவலகர் விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த குழு மேற்கொண்ட ஆலோசனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்கப்படும் என்றும், இந்திய சட்ட ஆணையமும் இதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று உயர்மட்ட குழு கேட்டுக் கொண்டுள்ளது. 

Similar News