5 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் : 1.63 கோடி வீடுகள் கட்டி, படைக்கப்பட்ட மாபெரும் சாதனை!
Pradhan Mantri Awaas Yojana – Gramin completes 5 years
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நவம்பர் 20ஆம் தேதி வீட்டு வசதி தினமாக கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களில் பூமி பூஜை, கிரகபிரவேசம், மாதிரிவீடுகளை பயனாளிகள் பார்வையிடுதல் மற்றும் அவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்து தெரிவிப்பது போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைவருக்கும் வீடு என்ற உயர்ந்த எண்ணத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
திட்டத்தின் பின்னணி
பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2.95 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 1.63 கோடி வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2021-22ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.7,775.63 கோடி. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.1,47,218.31 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் மற்ற அரசாங்கத் திட்டங்களுடன் ஒன்றிணைந்து குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறது. கழிப்பறை கட்டுவதற்கான உதவியானது SBM-G உடன் இணைப்பதன் மூலம் கிடைக்கிறது. பல்வேறு அரசாங்க திட்டங்களின் கீழ் குழாய் குடிநீர், மின்சார இணைப்பு, எல்பிஜி எரிவாயு இணைப்பு போன்றவை வழங்கப்படுகிறது.