மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி! ஆப்கானிஸ்தான் அதிபர் புகழாரம்!

மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி! ஆப்கானிஸ்தான் அதிபர் புகழாரம்!

Update: 2021-02-09 19:14 GMT
பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனியுடன் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், மோதல்கள் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவின் முழு உதவியையும் உறுதிப்படுத்தினார்.

அஷ்ரப் கனியுடன் உரையாடும் போது, பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் நட்பை எந்த அந்நிய சக்தியாலும் தடுக்க முடியாது என்று உறுதியளித்ததாகவும், இந்தியா ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திச் செயற்பாட்டில் தொடர்ந்து இணைந்து இருப்பதாகவும் உறுதியளித்தார்.

மோதல்கள் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பல காலமாக நடைபெற்ற வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, "ஆப்கானிஸ்தானில் வன்முறையை குறைப்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு விரிவான போர்நிறுத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்"  என்று கூறினார். “ஆப்கானிஸ்தானுக்குள் ஒற்றுமை முக்கியமானது. ஒன்றுபட்ட ஆப்கானிஸ்தான் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்.” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதற்கிடையில், உள்கட்டமைப்பு திட்டங்களை கட்டியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அஷ்ரப் கனி, “ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் வளர்ச்சி உதவி நமது நிலப்பரப்பில் சின்னமாக குறிக்கப்பட்டுள்ளது.” என்றார். மேலும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியா ஒரு உண்மையான கூட்டாளி என்றும் அவர் குறிப்பிட்டார்.

காபூலின் இரண்டு மில்லியன் குடிமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மற்றும் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்தப்படும் ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இன்று உச்சிமாநாட்டில் கையெழுத்திட்டன. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே பல உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துள்ள இந்தியா, முக்கியமான இந்த அணையை விரைவில் கட்டி முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News