மற்ற நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இந்தியா இருந்ததில்லை- பிரதமர் மோடி
இந்தியா எந்த ஒரு நாட்டுக்கோ மற்றும் பிற சமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று வரையில் இந்த முழு உலகத்தின் நன்மைக்காகவே சிந்தித்து வருகிறோம் என்றார்.
சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: செங்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புனித குருத்வார், நமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு குரு தேக் பகதூர் ஜி எவ்வளவு பெரிய தியாகத்தை செய்திருப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அந்த சமயத்தில் நமது நாட்டில் மதவெறி புயல் வீசியது. மதத்தை தத்துவம், அறிவியல், சுய சிந்தனை என்று கருதக்கூடிய நம் இந்தியா, மதத்தின் பெயரால் வன்முறை மற்றும் பல்வேறு சண்டை செய்தவர்களை எதிர்கொள்கிறது. எவ்வளவு பெரிய சக்திகளெல்லாம் மறைந்து போனது. ஆனால் இந்தியா மட்டும் இன்றும் அழியாமல் நிலைத்து நின்று முன்னேறி வருகிறது. மேலும், இந்தியா எந்த ஒரு நாட்டுக்கோ அல்லது மதத்திற்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றுவரை நாம் இந்த முழு உலகத்தின் நன்மைக்காகவே சிந்தித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Source, Image Courtesy:Vikatan