தேர்வுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.. பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.!
தேர்வுக்கு தயாராகும் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.. பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.!
இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் ‘பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அதே போன்று இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பிரதமர் மோடி நேரடியாக மாணவர்களுடன் சென்று கலந்துரையாடினார். ஆனால் இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கலந்துரையாடல் பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘நமது தேர்வு வீரர்கள் தேர்வுக்காக தீரமுடன் தயாராகி வரும் நிலையில், பரிக்ஷா பே சார்ச்சா 2021-ம் வந்து விட்டது. ஆனால் இந்த முறை முற்றிலும் ஆன்லைன் மூலம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம். வாருங்கள், புன்சிரிப்புடன், மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த முறை மாணவர்கள் மட்டுமே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றன. ஆனால் இந்த முறை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 14ம் தேதி வரை மாணவர்கள் ‘mygov’ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.