‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை.. தமிழக, கேரள முதலமைச்சரிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை.. தமிழக, கேரள முதலமைச்சரிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

Update: 2020-12-03 11:58 GMT

நிவர் புயலை தொடர்ந்து வங்க கடலில் கடந்த நவம்பர் 28ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை வந்து அடைகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இந்த புயலானது இன்று காலை மன்னார் வளைகுடாவில் இருந்து குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து செல்கிறது. இதனையடுத்து இன்று பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. 


பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து இன்றிரவு அல்லது அதிகாலையில் ‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆதரவும் வழங்கப்படும். இரண்டு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் பல்வேறு குழுக்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

Similar News