ஒரே நாளில் ஃபாஸ்ட்டேக்கில் ரூ.80 கோடி வசூல்.. மத்திய அரசு பெருமிதம்.!

ஒரே நாளில் ஃபாஸ்ட்டேக்கில் ரூ.80 கோடி வசூல்.. மத்திய அரசு பெருமிதம்.!

Update: 2020-12-26 10:11 GMT

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வசூல் ஒரே நாளில் ரூ.80 கோடியைக் கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்தச் சாதனை வாகன ஓட்டிகளிடம் கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. அதில், சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 லட்சத்தைக் கடந்தது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

நெடுஞ்சாலைகளில், ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2.20 கோடி ஃபாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், ஃபாஸ்ட்டேக் பயன்படுத்துவது கட்டாயமாகிறது. இந்த முறையால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு எளிதாக அமையும். நெரிசலில் வாகனங்கள் சிக்காது. அனைவரும் எளிதில் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியும். இதன் காரணமாகவே ஃபாஸ்ட்டேக் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஃபாஸ்ட்டேக் முறையை பயன்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு நேரமும், எரிபொருளும் மிச்சமாகிறது. இந்த மின்னணு கட்டணப் பரிமாற்றத்துக்காக, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News