காளி போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை எச்சரித்த இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் சரஸ்வதி கைது!
தமிழகத்தை சேர்ந்தவர் லீனா மணிமேகலை. இவர் ஆவணப்பட இயக்குநராக உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னர் காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதில் இந்துக் கடவுளான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைப்பிடிக்கும் விதமாக காட்சி இருந்தது. இதற்கு இந்துக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தொடர்ந்து இந்துக் கடவுள்களை அவமரியாதை செய்து வருபவர்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர் என்ற கண்டனம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த அஜய் கௌதம் என்பவர் இந்த போஸ்டர் குறித்து டெல்லி காவல் துறையினரிடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திலும் லீனா மணிமேகலை பற்றி புகார் அளித்திருந்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும் படத்தின் மீது தடை விதிக்கவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இவர் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் லீனா மணிமேகலை மீது புகார்கள் குவிந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். காளி ஆவணப்படத்தின் போஸ்டருக்கு தனது கடுமையான கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் லீலா மணிமேகலை எங்கிருந்தாலும் நடமாட முடியாது. உடனடியாக காளி புகைப்பிடிக்கும் காட்சியை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தியிருந்தார். மேலும், கடுமையான வார்த்தைகளில் பேசி லீனா மணிமேகலையை கண்டித்தார்.