வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை 33 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி சாதனை.!

வந்தே பாரத் திட்டத்தில் இதுவரை 33 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி சாதனை.!

Update: 2020-12-02 15:21 GMT

திருச்சியில் இருந்து தமிழர்கள் நலனுக்காக எட்டு கட்டங்களாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன என்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: 

உலகம் முழுவதும் கொரோனா பரவியதன் காரணமாக, லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றும் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஏராளமான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெளிநாடுகளில் பணி புரிந்து வந்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வருவதற்கு, மத்திய அரசு வந்தே பாரத் விமான இயக்கத்தை அறிவித்தது.

வந்தே பாரத் விமானங்கள் மூலம், 33 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், சிறப்பு விமான சேவை மே மாதம் 7-ம் தேதி முதன்முதலாக தொடங்கப்பட்டது.

இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் வெளி நாடுகளில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்களை தாயகத்துக்கும், கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக, இந்தியாவில் இருந்த வெளிநாட்டவர்களை அவர்களது நாடுகளுக்கு அழைத்துச் செல்லவும் இந்த விமானங்கள் இயக்கப்பட்டன.

இதுவரை எட்டு கட்டங்களாக வந்தே பாரத் இயக்கம் மூலம், 7789 விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், திருச்சி-அபுதாபி இடையே டிசம்பர் மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வியாழக்கிழமையன்றும் விமானங்களை இயக்கவுள்ளது.

டிசம்பரில், வந்தே பாரத் இயக்கத்தின் கீழ், திருச்சிக்கும், சிங்கப்பூர், துபாய், குவைத், ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு இடையே விமான சேவை நடைபெறும்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு எட்டாவது கட்டமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்கவுள்ளது .

தம்மம்- திருச்சி, தோஹா- திருச்சி பிரிவில் இந்த நிறுவனம் விமானங்களை இயக்கவுள்ளது. திருச்சி- ஷார்ஜா இடையே விமானங்கள் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும். திருச்சி-துபாய் மார்க்கத்தில், விமான சேவை திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் இயக்கப்படும்.

சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகளின்படி, வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு, அறிகுறியற்ற, முன் அறிகுறி, குறைவான பாதிப்பு ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் நடைபெறும்.

அறிகுறிகளுக்கு ஏற்ப, அவர்கள் வீட்டுத் தனிமையிலோ அல்லது கோவிட் சிகிச்சை மையங்களிலோ தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.

ஆர்டி பிசிஆர் சோதனை மூலம் தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றவர்கள் தனிமைப்படுத்துலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சுய தனிமைப்படுத்தலில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Similar News