ஆச்சர்யப்பட வைத்த அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்!

ஆச்சர்யப்பட வைத்த அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்!

Update: 2021-01-18 16:44 GMT

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்காக இரண்டு நாள்களில் 100 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையிலும் இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைத் திரட்டும் பணிகள் கடந்த ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஐந்து லட்ச ரூபாயை வழங்கினார்.

அதேபோல நிதி திரட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தில் தற்போது நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், "அயோத்தியில் நம்முடைய பிரம்மாண்டமான ஸ்ரீ ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்போது நம்மால் முடிந்த பங்களிப்பை ராமர் கோயிலுக்குச் செய்வோம்" என்றார். 

இந்நிலையில் நிதி திரட்டும் பணிகள் குறித்துப் பேசிய ராம ஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் ராய், நிதி திரட்டும் பணிகள் குறித்த முழு தரவுகள் இன்னும் எங்களிடம் வந்து சேரவில்லை. இருப்பினும், எங்கள் தன்னார்வலர்களிடம் இருந்து எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுமானத்திற்கு இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதியை திரட்டும் பணிகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை வரும் 2024ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Similar News