நாட்டின் 100வது கிசான் ரயில்: காணொளி மூலம் துவக்கி வைக்கிறார் பிரதமர்!

நாட்டின் 100வது கிசான் ரயில்: காணொளி மூலம் துவக்கி வைக்கிறார் பிரதமர்!

Update: 2020-12-28 16:53 GMT

மகாராஷ்டிரா-மேற்கு வங்கம் இடையிலான கிசான் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையிலும் கிசான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் கிசான் ரயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் இருந்து பீகாரின் தானாபூர் வரை இயக்கப்பட்டது. பின்னர் முசாபர்பூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளின் வரவேற்பைப் பொருத்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் கிசான் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அவ்வகையில் நாட்டின் 100வது கிசான் ரயில் சேவை இன்று தொடங்குகிறது.

மகாராஷ்டிராவின் சங்கோலாவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் வரை இயக்கப்படும் இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த ரயில் மூலம், காலிஃபிளவர், குடைமிளகாய், முட்டைக்கோஸ், முருங்கைக்காய், மிளகாய், வெங்காயம் போன்ற காய்கறிகளும், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம், கஸ்டார்ட் ஆப்பிள் போன்ற பழங்களும் கொண்டு செல்லலாம்.

Similar News