விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை.. சுமூக உடன்பாடு ஏற்பட வாய்ப்பு.!

விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை.. சுமூக உடன்பாடு ஏற்பட வாய்ப்பு.!

Update: 2020-12-30 09:20 GMT

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்டரீதியாக உறுதிபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு 5 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 6ம் கட்டமாக கடந்த 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினர்.

திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் விவசாய சங்கங்களின் சார்பில் சம்யுக்த் கிஷான் மோர்சா என்ற அமைப்பு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை குறித்தும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளின் நலன் கருதி மின்சார சட்டம் 2020ஐ திரும்பப் பெறுவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நடைபெறும் பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் விவசாயிகளுக்கு இந்த புதிய சட்டம் புரிகின்ற வகையில் ஆலோசனைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News