திருநங்கைகளுக்காக சிரத்தை எடுத்து சட்டம் வகுத்த மத்திய அரசு! மூன்றாம் பாலினத்தவர் வாழ்விலும் ஒளியேற்றிய திட்டம்!

திருநங்கைகளுக்காக சிரத்தை எடுத்து சட்டம் வகுத்த மத்திய அரசு! மூன்றாம் பாலினத்தவர் வாழ்விலும் ஒளியேற்றிய திட்டம்!

Update: 2021-02-05 07:38 GMT

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டம் ஒன்றை இயற்றியது. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, குடியிருப்பு போன்ற பொருளாதார மேம்பாட்டுக்கான விரிவான திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புக் காட்டி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா கூறியுள்ளார்.

சமூகத்தில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களைவதோடு, பாரபட்சமின்றி வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு, கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றை எளிதில் கிடைக்கச் செய்ய 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் வகை செய்கிறது.

மேலும் திருநங்கைகளுக்கான பிரத்யேக இணையதளம் தேசிய அளவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் வழங்கப்படும் திருநங்கைகளுக்கான அடையாளச் சான்றிதழை இந்த இணையதளத்தின் மூலம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 259 திருநங்கைகள் இந்த அடையாளச் சான்றிதழை பெற விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் தேசிய திருநங்கைகளுக்கான கவுன்சிலை மத்திய அரசு நிறுவியுள்ளது. திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் அநீதிகளை களைய இந்த கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த கவுன்சிலுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தலைவராகவும், குடும்ப நலம் மற்றும் சுகாதாரம், உள்துறை, வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், கல்வி, ஊரக வளர்ச்சி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சட்ட விவகாரங்கள், நித்தி ஆயோக் ஆகியவற்றின் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1500 செலுத்தப்பட்டது. இதில் 5711 திருநங்கைகள் பயனடைந்தனர்.

அவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. 8 மாநிலங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 1000-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Similar News