கொலையாவதற்கு 5 நாள்களுக்கு முன்பே போலீஸை நாடிய டைலர் - அலட்சியப்படுத்தியதா போலீஸ்?

Update: 2022-07-01 01:18 GMT

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் என்ற டெய்லர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரர்கள் டெய்லரின் தலையை அரிவாளால் வெட்டினார்.

அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த இரு நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் ரியாஸ், கவுஸ் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இதையடுத்து, கன்ஹையா லால் இறப்பதற்கு 5 நாள்களுக்கு முன்பு போலீஸில் தனக்குப் பாதுகாப்பு தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர்.

கன்ஹையா லால் தனக்கு பயங்கரமான மிரட்டல்கள் வந்ததையடுத்து, தனது கடையை 5 நாள்கள் மூடிவைத்திருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். புகாரளித்து பாதுகாப்பு கோரியும், அவருக்கு ராஜஸ்தான் போலீஸார் எந்தவித பாதுகாப்பும் அளிக்காததால்தான் கொடூரமாக படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார் என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Input From: Vikadan

Similar News