மதக்கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் 40 ஆண்டு திட்டத்தைத் திரும்பப்பெறும் உ பி அரசு.!

மதக்கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் 40 ஆண்டு திட்டத்தைத் திரும்பப்பெறும் உ பி அரசு.!

Update: 2020-12-02 17:15 GMT

லவ் ஜிகாத் என்று கூறப்படும் திருமணத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஆளும் பா.ஜ.க உத்தரப் பிரதேசத்தில் ஒரு புதிய சட்டத்தைப் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கலப்பு திருமணங்களுக்கு வழங்கும் சலுகைக்கான 44 ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு திரும்பப்பெறத் திட்டமிட்டுள்ளது. 

மதகலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் 1976 இல் அப்போதைய உத்தரப் பிரதேச அரசாங்கம் தேசிய ஒருங்கிணைப்பு துறையால் இந்த திட்டத்தைக் கொண்டுவந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகும், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்னும் இந்த சட்டம் நடைமுறையிலிருந்து வந்தது. தற்போது, உத்தரகாண்டும் இந்த சட்டத்தைத் திரும்பப்பெற முயன்று வருகின்றது. 

இந்த சட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புபவர்கள், கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் திருமணமான இரண்டு ஆண்டுக்குள் மாவட்ட நீதிபதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட பின்பு அவர்களுக்கு உரியத் தொகை வழங்கப்படும். இருப்பினும் 2017 இல், கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் மதமாற்றம் செய்தால் இந்த திட்டத்தின் சலுகையை இழக்க நேரிடும் என்றும் புதிய விதியை உத்தரப் பிரதேச அரசாங்கம் பிறப்பித்தது. 

கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் 11 பயனாளிகள் தலா ரூபாய் 50,000 பெற்றுப் பயன்பெற்றதாக அறிக்கை கூறுகின்றது. ஆனால் 2020 இல் இதுபோன்று எந்த விண்ணப்பங்களும் இல்லை மற்றும் மேலும் நான்கு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 24 இல் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை உத்தரப் பிரதேச அமைச்சரவை பிறப்பித்தது. அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநர் சட்டத்தை அறிவித்து அதற்கான அதிகாரப் பூர்வ உத்தரவையும் பிறப்பித்தார். இந்த சட்டத்தின் மூலம், ஒருவர் திருமணத்திற்காகக் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டால் அவருக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. மேலும் இது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். 

Similar News