கவுன்சிலராக தனது பணியை தொடங்கிய நிலையில் தற்போது ஜனாதிபதியாக அமரும் திரௌபதி முர்மு!
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க., கூட்டணியின் வேட்பாளராக களம் கண்டு வென்றுள்ள திரௌபதி முர்மு யார்? எந்த இடத்திலிருந்து தற்போது இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் என்று பார்ப்போம்.
இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 18ம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதன்படி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பற்றி காண்போம், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடியின வகுப்பினை சேர்ந்தவர். இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஒடிசா மாநிலம், மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பிறந்தவர் திரௌபதி முர்மு. இவர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இதன் பின்னர் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முதலில் ஆசிரியராக பணியாற்றிய இவர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் ஒரு கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினார்.
மேலும், கடந்த 2000ம் ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சராக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் ஒடிசா மாநிலத்தில் இருந்து ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடியின வகுப்பினை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், பா.ஜ.க., சார்பில் ஜனாதிபதியாக நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு தற்போது 15வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். முறைப்படி ஜூலை 25ம் தேதி பதவியேற்கலாம் என எதர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: One India Tamil